Breaking News

விவசாயத்திலும் இந்த நாட்டின் அரசியலிலும் விஷம் கலந்துள்ளது - துரைராசசிங்கம்


இயற்கையை அனுசரிக்காமல் விவசாயம் எவ்வாறு விசமாக மாறிப்போனதோ அது போன்றே எமது நாட்டின் இயற்கையை அனுசரிக்காத காரணத்தினால் எமது நாட்டின் அரசியலும் விசமாக மாறியுள்ளது. விசம் கலந்த நம்முடைய நாட்டின் அரசியலை விசமற்ற அரசியலாக ஆக்குகின்ற செயற்பாட்டினை மேற்கொள்ள வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமான கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.



விவசாய செயற்பாட்டினை மேம்படுத்தும் முகமாக அதிமேதகு ஜனாதிபதி அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட உணவு உற்பத்தி ஆண்டு திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தினால் மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் இன்றைய தினம் நடாத்தப்பட்ட விஷேட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

இயற்கையை அனுசரிக்காமல் வேறு பாதைக்குச் சென்ற விவசாயத்தைத் தற்போது மீண்டும் இயற்கையை நோக்கியதாக ஆக்குகின்ற நிலைமையை எந்தளவிற்கு நாங்கள் அனுசரிக்க வேண்டியவர்களாக இருக்கின்றோமோ, அதேபோன்று விசம் கலந்த நம்முடைய நாட்டின் அரசியலை விசமற்ற அரசியலாக ஆக்குகின்ற செயற்பாட்டிலும் அனுசரிப்பினை மேற்கொள்ள வேண்டும். அதனடிப்படையில் தான் நல்லாட்சி என்கின்ற விடயம் மைத்திரிபால சிறிசேன அவர்களை ஜனாதிபதியாகவும், ரணில் அவர்களை பிரதமராகவும், கொண்டு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அந்த ஆட்சியிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாங்களும் சேர்ந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

 புதிய அரசியலமைப்புச் சட்டம் தற்போது உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதனைச் சரியான, காத்திரமான முறையிலே செயற்படுத்த வேண்டும் என்கின்ற எண்ணம் மிகச் சிறந்த அரசியற் தலைவர்களிடையேயும், மிகச் சிறந்த எண்ணம் கொண்ட பொதுமக்களிடையேயும் இருக்கின்றது.

அண்மையில் வெளியான செய்தி ஒன்றில் இராவண பலய என்ற அமைப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது தேசியப் பட்டியலில் ஒரு தேரரை நியமிக்கலாம் என்று சொல்லியிருக்கின்றது. ஏனெனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் முன்நகர்வு என்பது தற்போது தென்னகத்தைச் சென்றடைந்திருக்கின்றது. தென்னகத்திலே இருக்கின்ற பெரியவர்கள் அதனை விளங்கியிருக்கின்றார்கள். பிரிக்கப்படாத, பிரிக்கப்பட முடியாத ஒரே நாட்டிலே அதிகாரங்கள் பரந்து, பகிர்ந்து கொள்வதற்கு சிறுபான்மை மக்கள் தயாராக இருக்கின்றார்கள். அவர்கள் இந்த நாட்டின் அடிப்படைத் தத்துவத்தினை எந்தவிதத்திலும் தகர்த்தெறிய மாட்டார்கள்.

ஒரே நாட்டுக்குள்ளே வாழ்வதற்குச் சம்மதித்திருக்கின்றார்கள். அதற்கேற்ற வகையிலே நீதியான முறையிலே இறங்கி வந்திருக்கின்றார்கள் என்கின்ற செய்தி தென்னகத்திற்குச் சென்றிருக்கின்றது. அதனைத் தாங்க முடியாத இராவண பலய போன்ற அமைப்புகள் இதனைக் குழப்புவதற்காக அவ்வாறான செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் இது தொடர்பாக மக்கள் மிகவும் தெளிவாகவே உள்ளார்கள்.

துட்கைமுனு மன்னன் காட்டிய சிறந்த பண்பு அதற்கு பின்பு எமது நாட்டிலே வந்த தலைவர்கள் எவராலும் பின்பற்றப்படவில்லை. எல்லாளன் மன்னன் எதிரியாக இருந்தாலும் அவனை வென்ற துட்டகைமுனு மன்னனுக்கு ஒரு சிலையை நிறுவி அதற்கேற்ற மரியாதையினைக் கொடுத்தான். அத்தகு பண்பு இந்நாட்டில் எந்த தலைவர்களுக்கும் இன்னும் வரவில்லை. இந்த நாடு சுதந்திரம் பெற வேண்டும் என்பதற்காக தமிழ், சிங்கள அரசியற் தலைவர்கள் ஒன்றாகச் சேர்ந்து செயற்பட்டு வந்தார்கள். ஆனால் சுதந்திரத்தின் பின்பு இதனை சரியான முறையில் கடைப்பிடிக்காததன் காரணமாக நாம் இன்று இந்த துர்ப்பாக்கிய நிலையில் இருக்கின்றோம்.

 வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு எல்லாப் பகுதிகளிலேயும் இருக்கின்ற மக்கள் இந்த நாட்டின் இயற்கையான அரசியல் எது என்பதை அடையாளம் கண்டிருக்கின்றார்கள். அந்த அடையாளத்தின் அடிப்படையில் இந்த நாட்டின் அதிகாரப் பரவலாக்கல் தொடர்பான விடயத்தைச் சிந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்த இயற்கை நிலைமை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இந்த வளமுள்ள நாடு தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டிலே இயற்கையான நிலைமையைப் பின்பற்றாதது தான் வெளிநாடுகளில் இருந்து உணவை இறக்குமதி செய்வதற்கான மூல காரணம் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

மழை வளமும் நில வளமும், மலை வளனமும் கொண்ட இந்த நாட்டிலே இன்று நாங்கள் பல்வேறு சங்கடங்களுக்குள்ளே உட்பட்டவர்களாக இருக்கின்றோம். 65 வீதமான விவசாய நிலம், 70 வீதமான விவசாயிகள், நாட்டைச் சுற்றியும் கடல் வளம் இவற்றையெல்லாம் சைத்துக் கொண்டு நாங்கள் எமது பால் தொடர்பான உணவுத் தேவைக்காக 40 பில்லியன்களையும், ஏனைய உணவுத் தேவைகளுக்காகக 100 மில்லியன் ரூபாய்களையும் நாங்கள் செலிவிடுகின்றோம்.

இயற்கையை அனுசரித்து செயற்படாத காலத்தில் இயற்கை ஒரு பாடத்தைக் கற்பிக்கும் என்பார்கள். விவசாயத்திலே பசுமைப் புரட்சி என்று சொல்லி மிக அதிகமான இரசாயணப் பொருட்களைப் பாவிப்பதன் காரணமாக நாம் உணவுடன் சேர்த்து நஞ்சினை உட்கொள்ளும் ஒரு துர்ப்பாக்கிய நிலைமையை மாற்றியமைக்கும் செயற்பாடாகவும், விவசாயத்தினை மேம்படுத்தும் செயற்பாடகவும் தற்போது உணவு உற்பத்தி ஆண்டு மற்றும் விசமற்ற விவசாயம் என்கின்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றது என்று தெரிவித்தார்.

No comments