Breaking News

கிழக்கில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக இல்லை - ரணில்




வடக்கு - கிழக்கு இணைப்பை மேற்கொள்வதற்கு, கிழக்கில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக இல்லை. வடக்கில் பெரும்பான்மையா என்று எனக்குத் தெரியவில்லை. வடக்கு - கிழக்கைப் பலவந்தமாக இணைக்க முடியாது. என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அவர் வழங்கிய செவ்வி ஒன்றிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

கேள்வி – சமகாலத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலைகளுக்கமைய புதிய அரசமைப்பைக் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கையுள்ளதா?

பதில் – நாங்கள் முயற்சிக்கின்றோம். பார்ப்போம் யார் எதிர்க்கின்றார்கள் என்று. மக்களுக்குத் தெரியும் யார் அதை எதிர்க்கின்றனர் என்று.

கேள்வி – கூட்டு அரசின் முயற்சிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் வடக்கு மக்களிடம் கடும் அழுத்தத்துக்குள்ளாகி வருகிறாரே?

பதில் – அவருக்கும் பிரச்சினையுள்ளது. எமக்கும் பிரச்சினையுள்ளது. அனைவரையும் ஒன்றிணைத்துக் கொண்டுதான் இந்தப் பயணத்தை முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டியுள்ளது. நாங்கள் ஒன்றிணைந்தாலும் எமக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையில்லை.

கேள்வி – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது தேர்தல் அறிக்கையில் வலியுறுத்தியுள்ள இணைந்த வடக்கு – கிழக்கில் கூட்டாட்சி சாத்தியமாகுமா?

பதில் – அவர்கள் கூட்டாட்சிக்குச் சமமான முறைமையொன்றையே வலியுறுத்துகின்றனர். நாங்கள் கூறுகின்றோம். ஒற்றையாட்சி கோட்பாட்டுக்கு பாதகம் ஏற்படாத வகையிலான தீர்வையே. இதில் பொதுவான காரணிகள் பல உள்ளன. எங்களுடைய நிலைப்பாடு ஒற்றையாட்சி கட்டமைப்பில் தீர்வு காண்பதாகும்.

ஒற்றையாட்சிக்குப் பாதகம் ஏற்படாத வகையில் அதிகாரப்பகிர்வை மேற்கொண்டால் பிரச்சினையில்லாது தேசியக் கொள்கைகளை வகுத்து வேலைகளைச் செய்ய முடியும். தேர்தலின் பின்னர் இது தொடர்பில் மீண்டும் பேச்சுகள் ஆரம்பிக்கப்படும்.

கேள்வி – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவிக்கும் வடக்கு – கிழக்கு இணைப்பு சாத்தியமாகுமா?

பதில் – அதனைச் செய்ய கிழக்கில் தமிழர்கள் பெரும்பான்மையாக இல்லையே. வடக்கில் பெரும்பான்மையா என்று எனக்குத் தெரியாது. கிழக்கில் பெரும்பான்மையில்லை. பலவந்தமாக இணைக்க முடியாது.

கேள்வி – முஸ்லிம் மக்கள் இணங்கினால் இணைக்கக்கூடிய சாத்தியங்கள் உள்ளனவா?

பதில் – அதனைப் பார்க்கலாம். தற்போது பெரும்பான்மையில்லை.

No comments