Breaking News

ஸ்ரீ சண்முகா இந்து கல்லூரியில் சேலைதான் அணிய வேண்டும்: இரா.சம்பந்தன் முடிவு

ஸ்ரீ சண்முகா இந்து கல்லூரியில் சேலைதான் அணிய வேண்டும்: இரா.சம்பந்தன்

 

 

திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் ஏற்பட்ட ஹபாயா சர்ச்சை தொடர்பில், இரா.சம்பந்தனிற்கு நேற்று ரிசாட் பதியுதீன் கடிதம் எழுதியிருந்தார். அதற்கு இன்று இரா.சம்பந்தன் பதில் கடிதம் எழுதியுள்ளார். அது இணைக்கப்பட்டுள்ளது.

28.04.2018
கௌரவ றிசாத் பதியூதீன்,
கைத்தொழில் மற்றும் வர்த்தகஅமைச்சர்,
தலைவர்-அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்,
37 C- ஸ்ரன்மோர் கிறசென்ட்.
கொழும்பு– 5.

அன்புள்ள அமைச்சர் அவர்களுக்கு,

திருகோணமலை ஸ்ரீ சண்முக இந்துமகளிர் கல்லூரியில் உருவாகியுள்ள ஆசிரிய ஆடை தொடர்பான சர்ச்சை

மேற்படிவிடயம் தொடர்பாக தாங்கள் எனக்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளதான செய்தி இன்றைய (28.04.2018) சில தமிழ் பத்திரிகைகளில் அதன் முழுமையான உள்ளடக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளன. குறிப்பிட்ட கடிதம் இதுவரை எனது பார்வைக்குக் கிடைக்கவில்லையாயினும், பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகளில் முழு விபரமும் குறிப்பிடப்பட்டுள்ளமையால் அது தொடர்பான எனது நிலைப்பாட்டினைத் தங்களுக்குத் தெரிவிப்பது பொருத்தமென நினைக்கின்றேன்.
எனது தலைமைத்துவம் பற்றியும் மக்கள் மத்தியிலும் தங்களுக்கும் என் மீது உள்ள மதிப்புப் பற்றியும் தாங்கள் சிறப்பாகக் குறிப்பிட்டமைக்காக எனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டு குறிப்பிட்ட விடயம் தொடர்பாக எனது நிலைப்பாட்டை அறியத் தருகின்றேன்.

தமிழ் மற்றும் முஸ்லிம் இனங்களைச் சேர்ந்த தமிழ் பேசும் மக்கள் தொடர்பாக எமது தலைவர் தந்தை செல்வநாயகம் அவர்கள் பின்பற்றியதும், அவரைத் தொடர்ந்து தலைவர் அ.அமிர்தலிங்கம் அவர்கள் பின்பற்றியதுமான, “நாம் தமிழ் பேசும் மக்கள்” என்ற கொள்கையை நானும் தொடர்ந்து பின்பற்றி வருகின்றேன் என்பதை மக்களும் நீங்களும் நன்கு அறிவீர்கள்.

வடக்குக் கிழக்குப் பிராந்தியங்களில் தமிழ்பேசும் மக்களுடைய நிலங்கள் அவர்களுடைய கலாசார, பாரம்பரியங்கள் பாதுகாத்துப் பேணப்பட வேண்டும் என்ற அடிப்படையில் பண்டாரநாயக்கா–செல்வநாயகம் ஆகியோரால் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திலும் பின்பு டட்லி சேனநாயக்கா–செல்வநாயகம் ஆகியோருக்கிடையில் செய்யப்பட்ட ஒப்பந்தத்திலும் குறிப்பிடப்பட்ட அதே கொள்கையின்படியே எனது அரசியற் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். அந்தவகையில் தமிழ் – முஸ்லிம் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காக குறிப்பாக எனது தொகுதியான திருகோணமலையிலும் பொதுவாக இந்நாட்டிலும் நானும் நான் சார்ந்த அரசியல் கட்சிகளும் எம்மால் முடிந்தளவு பங்களிப்பைச் செய்துவருகின்றோம்.

திருகோணமலை ஸ்ரீ சண்முக இந்துமகளிர் கல்லூரி 95 ஆண்டுகளுக்கு முன்னர் இந்து மகளிர் கல்விகற்பதற்காக இந்து சமயப் பெண்மணியான தங்கம்மா சண்முகம்பிள்ளை என்ற கொடையாளியினால் தனதுசொந்தப் பணத்திலும், சொந்த நிலத்திலும் இந்து மகளிரின் கல்வி மேம்பாட்டுக்காக ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த ஒரு பாடசாலையாகும். 1960களுக்குப் பின்னர் இந்தப் பாடசாலையை அரசாங்கம் பொறுப்பேற்பதற்கு முன்னர் இங்கு இந்து மகளிர் மாத்திரம் உயர்கல்வி கற்று வந்ததோடு, இந்து கலாசார பாரம்பரியங்களும் பின்பற்றப்பட்டுவந்த வரலாறு உண்டு. தனியார் பாடசாலைகளைப் பொறுப்பேற்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் கிறிஸ்தவ பாதிரிமார்கள் நடாத்திய பிரபல பாடசாலைகளும் அதே போன்று இந்து மற்றும் ஏனைய சமூக நிறுவனங்களால் பராமரிக்கப்பட்டு வந்த பாடசாலைகளும் பொறுப்பேற்கப்பட்ட போதும்,அவற்றின் பெயர், கலாசாரம், கல்விமுறை என்பன மாற்றங்களுக்கு உட்படாமல் தொடர்ந்து பேணப்படும் என்ற அடிப்படையிலேயே அவை பொறுப்பேற்கப்பட்டன.

இந்த நிலைமையே தொடர்ந்தும் அவ்வாறான அநேக பாடசாலைகளில் பேணப்பட்டு வருவதைத் தாங்களும் அறிவீர்கள். இதன் அடிப்படையிலேயே திருகோணமலை ஸ்ரீ சண்முக இந்துமகளிர் கல்லூரியிலும் அதன் ஆரம்பகால மரபுகள் பேணப்பட்டு வருவதோடு, இன்று தேசியப் பாடசாலையாக அங்கீகரிக்கப்பட்டு சிறந்த உயர் பெறுபேறுகளைப் பெறும் பாடசாலையாகச் செயற்பட்டு வருகின்றது. அவ்வாறு செயற்படுவதற்கு பெற்றோர்கள்,நலன் விரும்பிகள்,பழைய மாணவிகள் மற்றும் சமய, சமூகநிறுவனங்கள் உதவியாகவும் அனுசரணையாகவும் இருந்து வருகின்றன.

அண்மையில் இந்தக் கல்லூரியில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக எனது கவனத்துக்குத் தெரிவிக்கப்பட்டதன் படி,கடந்த நான்கு ஆண்டுகளாக முஸ்லிம் ஆசிரியைகள் மூன்றுபேர் இக் கல்லூரியில் சேவைக்காக இணைக்கப்பட்டுத் தமது கடமைகளைச் செய்துவந்தபோது அவர்கள் இக்கல்லூரியின் உடை நியதிகளுக்கு அமைவாக சேலை அணிந்தே கல்லூரிக்கு வந்து கொண்டிருந்தனர். அவர்கள் முழுமையாக இக் கல்லூரியின் மரபு,கல்லூரி ஒழுக்கவிதி முறைகள் மற்றும் கல்வி விழுமியங்களுக்கு அமைவாக கடந்த நான்கு ஆண்டுகளாக எவ்வித வேறுபாடும் இன்றிச் செயற்பட்டுள்ளனர். அவர்கள் தொடர்பாக இந்தக் கல்லூரி சமூகம் எத்தகைய எதிர்ப்பையும் வெளிக்காட்டவில்லை. ஆயினும், இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஒரு முஸ்லிம் ஆசிரியை இடமாற்றம் பெற்றுவந்த போது முஸ்லிம் பெண்கள் அணியும் ‘அபாயா’ உடையில் கல்லூரிக்கு வந்துள்ளார். அவ் வேளையில் கல்லூரி அதிபர் அந்த ஆசிரியைக்கு அந்தக் கல்லூரி ஆசிரியைகளின் உடை தொடர்பான மரபுகளையும், அப் பாடசாலை ஒழுக்கவிதிகளையும் எடுத்துக்கூறி ஏனைய ஆசிரியைகளைப் போன்று சேலை அணிந்து வருமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

குறித்த ஆசிரியையும் தனது உடையில் மாற்றம் செய்து சேலை அணிந்து வருவதற்கு சிறிதுகால அவகாசம் கோரியிருந்ததால் அதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவ்வாறு இருந்த வேளையில், இந்தமாதம் 22ந் திகதி, ஏற்கெனவே சேலை அணிந்து கல்லூரிக்கு வந்து கொண்டிருந்த மூன்று முஸ்லிம் ஆசிரியைகளும் கணவர்மாருடன் கல்லூரிக்கு வந்து தாமும் இனிமேல் ‘அபாயா’ அணிந்துவரப் போவதாகவும், அது தமது உரிமை என்ற ரீதியிலும் அச்சுறுத்தும் பாணியில் அதிபருக்குத் தெரிவித்துவிட்டு அடுத்தநாள் ‘அபாயா’ உடை அணிந்து வந்துள்ளனர். இதனைக் கண்ணுற்ற மாணவிகளும் பெற்றோர்களும் பழைய மாணவிகளும் மற்றும் பாடசாலையின் நலன்விரும்பிகளும் முஸ்லிம் ஆசிரியைகளின் இந்தத் திடீரென ஏற்பட்ட உடைமாற்றம் தொடர்பாக தமது ஆட்சேபனையைத் தெரிவித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர். இதனால் ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து மேலதிகக் கல்விப் பணிப்பாளர் தலைமையில் அதிபர் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர் பேசி ஒரு தற்காலிக ஏற்பாடு செய்யப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அறிகின்றேன்.

2400 மாணவிகள் கல்வி பயிலும் இக் கல்லூரியில் கிட்டத்தட்ட 120 க்குமேற்பட்ட முஸ்லிம் மாணவிகளும் 110 கத்தோலிக்க ,கிறிஸ்தவ மாணவிகளும் இப்போது கல்வி பயில்கின்றனர்.

இது ஒரு தேசிய பாடசாலையாக உள்ளமையால் இங்கு எந்த இனத்தை அல்லது மதத்தைச் சேர்ந்தவர்களும் கல்விகற்கவும் கல்வி போதிக்கவும் எத்தகைய தடையும் இல்லை. ஆயினும், கல்லூரியில் பேணப்பட்டு வந்த ஒழுக்கக் கட்டுப்பாடுகள், கலாசார மரபுகள்,மாணவிகள், ஆசிரியைகள் அணிகின்ற உடை தொடர்பான ஒழுங்குமுறைகள் அவ்வாறே பேணப்பட வேண்டு என்பது இந்தக் கல்லூரி சமூகத்தின் விருப்பமாகும். முஸ்லிம் ஆசிரியைகள் ஏற்கெனவே இந்தக் கல்லூரிக்குச் சேலை அணிந்து, தங்களது பாரம்பரியமான முக்காடு (பர்தா) அணிந்து வந்து சேவையாற்றியது போல மேலும் தொடர்வதை இக்கல்லூரி சமூகம் எவ்விதத்திலும் ஆட்சேபிக்கமாட்டாது. அதுபோல இக்கல்லூரியில் கல்வி கற்பிக்கும் ஆசிரியைகள் கல்லூரிக்கு வெளியே தாம் விரும்பியவாறுஉடை அணிந்து கொள்வதும் அவர்களது விருப்பமாகும். ஆயினும்,அவர்கள் கல்லூரிக்கு வருகின்றபோது மட்டும் ஆசிரியைகளுக்கான உடை பற்றிய தேசியக் கொள்கைகளின் அடிப்படையிலும் இக்கல்லூரி ஆசிரியைகளுக்கான உடை ஒழுங்குவிதிகள் அடிப்படையிலும் செயற்படுவதே இந்தப் பிரச்சினைக்கான தீர்வாகஅமையும் என நான் நினைக்கின்றேன்.

இவ்விடயத்தில் எதிர் எதிரான இன,மத ரீதியான ஆர்ப்பாட்டங்களைச் சமயசார்பு அமைப்புக்கள் செய்வது விரும்பத்தக்கதல்ல என்பதே எனது நிலைப்பாடு.

இனங்களுக்குரிய கலாசார உடைகளில் அண்மைக் காலங்களில் மாற்றங்கள் ஏற்பட்டுவருவது தவிர்க்க முடியாதது. இலங்கையில் முஸ்லிம் பெண்கள் ‘அபாயா’ அணிவதும் அவ்வாறான அண்மைக்கால ஒரு மாற்றமாகும். இத்தகைய மாற்றங்கள் எல்லாச் சமூகங்களுக்கும் எல்லா இனங்களுக்கும் பொதுவானதும் அவர்களுக்குரிய உரிமையுமாகும். இவ்வாறு ஆடைக் கலாசாரத்தில் அதிக மாற்றங்கள் ஏற்பட்டாலும் இன்னமும் ஆசிரிய பயிற்சிக் கல்லூரிகள் மற்றும் ஏனைய மதப் பாடசாலைகளில் போதிக்கும் முஸ்லிம் ஆசிரியைகளும் சேலை அணிவதே தற்போதும் நடைமுறையில் உள்ளது. அதுபோல விசேட சந்தர்ப்பங்களில் அல்லது இடங்களில், உதாரணமாக பாடசாலைகள், புனிதத்தலங்கள், மதவழிபாட்டிடங்கள் மற்றும் சில அலுவலகங்களில் உடை தொடர்பான கட்டுப்பாடுகள் பேணப்படுவது அந்தந்த நிறுவனங்களுக்குரிய தனித்துவமாகும். அதில் மாற்றங்களைச் செய்ய முனைந்தால் சமூகத்தில் பிரச்சினைகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாதுபோகும். நீங்கள் குறிப்பிட்டதுபோல கடந்தகாலங்களில் எமது இரு சமூகங்களுக்கு இடையிலான சிற்சில பிரச்சினைகளைப் பூதாகரமாக்கி பிளவுகளை ஏற்படுத்தி அவற்றில் குளிர்காய பல்வேறு தீயசக்திகள் செயற்பட்டு வந்துள்ளன
என்பதை நானும் ஏற்றுக் கொள்ளுகின்றேன்.
அத்தகைய தீய செயற்பாடுகளுக்கு நீங்களோ, நானோ முக்கியத்துவம் அளிக்கக் கூடாதென்பதே எனது விரும்பம்.

எனவே, இந்தச் சிறு பிரச்சினையைப் பெரிதுபடுத்தி மேலும் வளரவிடக்கூடாது என்பதே எனது நிலைப்பாடு. ஆகவே, இந்தப் பிரச்சினையை சம்பந்தப்பட்ட அமைச்சும், கல்வித் திணைக்களமும் குறித்த கல்லூரிச் சமூகமும் அக்கல்லூரியின் பெற்றோரும் பழைய மாணவிகளும் சேர்ந்து கட்டுப்பாடான ஒழுங்குமுறையில் பேசி, கல்லூரியில் பின்பற்றப்பட்டு வந்த உடை மரபுகளுக்கு மதிப்பளித்து,எந்தச் சமூகமாயினும் புதியஉடை கலாசாரத்தைஅறிமுகம் செய்யாமல், இதுவரை காலமும் இருந்து வந்தது போல தொடர்வதே பொருத்தமாக அமையும் என்பது எனது அபிப்பிராயமாகும். அதற்காக தங்களின் ஒத்துழைப்பையும் தங்களது சமூகத்தினது ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கின்றேன்.


குறிப்பு : இவ்விடயம் தொடர்பாக திருகோணமலை ஸ்ரீ சண்முக இந்துமகளிர் கல்லூரி
அதிபரினால் எனக்கு அனுப்பிவைக்கப்பட்ட, முழு விபரம் அடங்கிய அறிக்கையின் பிரதியொன்றை உங்கள் தகவலுக்காகவும், குறித்த சர்ச்சையின் பின்புலத்தை விளங்கிக் கொள்வதற்காகவும் இணைத்துள்ளேன்.
நன்றி
இரா.சம்பந்தன்,பா.உ.,
எதிர்க்கட்சித் தலைவர்
தலைவர் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.






 

1 comment:

  1. PlayAmo Casino Hotel and Resort Map - Mapyro
    The map of 논산 출장안마 the casino at Maha 나주 출장마사지 Ganesh Temple. A map 전주 출장마사지 showing the location and contact 아산 출장안마 information for Maha 여주 출장안마 Ganesh Temple in Maha Ganesh Temple.

    ReplyDelete