Breaking News

10 வருடங்களாக சிறையில் வாடிய அரசியல் கைதி விடுதலை

வத்தளை, எலகந்தைப் பகுதியில் அமைந்துள்ள மின்மாற்று நிலையத்தைக் குண்டு வைத்துத் தகர்த்தெறிய சதித் திட்டம் தீட்டினார் என்பது உட்பட பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் மூன்று வழக்குகளை எதிர்கொண்டகிளிநொச்சி இளைஞரொருவர் கடந்த சுமார் பத்து ஆண்டுகளாகச் சிறையில் இருந்த நிலையில், மூன்று வழக்குகளிலிருந்தும் விடுதலைசெய்யப்பட்டார்.

2008ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ் குற்றப் புலனாய்வுப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட கிளிநொச்சியைப் பிறப்பிடமாகக் கொண்ட ஜெயராம் இராமநாதனுக்கு எதிராக 2010ஆம் ஆண்டு நீர்கொழும்பு மேல் நீதிமன்றில் மூன்று வழக்குகளை சட்டமா அதிபர் தாக்கல் செய்திருந்தார்.

வத்தளை எலகந்தையில் அமைந்துள்ள மின்சார நிலையத்தைக் குண்டு வைத்துத் தகர்த்தெறிய சதித் திட்டம் தீட்டினார் எனவும், இராணுவத்தின் உயர் அதிகாரியின் நடவடிக்கைகளை வேவுபார்த்து புலித் தலைமையகத்திற்கு தகவல் வழங்கினார் எனவும், கடும்சேதம் விளைவிக்கக்கூடிய குண்டுகளை உடைமையில் வைத்திருந்தார் எனவும் மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு தனித்தனியாக மூன்று குற்றச்சாட்டுப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகள் கடந்த வாரம் நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளையில் எதிரியின் தரப்பில் ஆஜராகிய சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி.தவராஜா தமது வாதத்தை முன்வைத்தார்.

"2008ஆம் ஆண்டு எதிரியைக் கைதுசெய்த பொலிஸார் அவரை கடுமையாகத் தாக்கி அவரிடமிருந்து பலவந்தமாகக் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தைப் பெற்றுள்ளனர். இந்தக் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தைச் சான்றாகக்கொண்டு எதிரிக்கு எதிராகக் கொழும்பு மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட நான்கு வழக்குகளிலிருந்தும் கொழும்பு விசேட நீதிமன்றம் எதிரியை விடுதலைசெய்துள்ளது.

மேற்படி குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை சான்றாக ஏற்க மறுத்து எதிரியை கொழும்பு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இந்த வழக்கில் கடும்சேதம் விளைவிக்கக் கூடிய குண்டுகளை உடைமையில் வைத்திருந்தார் எனக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டபோதிலும் குண்டுகளோ அல்லது எந்த வெடிபொருட்களோ எதிரியின் உடைமையிலிருந்து கைப்பற்றப்பட்டன எனத் தெரிவிக்க இந்த நீதிமன்றில் அரச தரப்பால் சான்றுப்பொருட்களாக எதுவும் முன்வைக்கப்படவில்லை.

வழக்கைத் தொடர்ந்து நடத்துவதற்கு எதிரிக்கு எதிராக எந்தச் சான்றும் இல்லாத நிலையில் எதிரியை விடுதலைசெய்யும்படிநீதிமன்றத்தை வேண்டிக்கொள்கிறேன்.“ என்றார் சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி.தாவராஜா.

எதிரிக்கு எதிராக வழக்கைத் தொடர்ந்து நடத்துவதற்கு வேறு சான்றுகள் இல்லையென அரச சட்டத்தரணியும் நீதிமன்றுக்குத் தெரிவித்தமையை அடுத்து, நீதிபதி எதிரியை இந்த மூன்று வழக்குகளிலிருந்தும் கூட விடுதலைசெய்தார்.

No comments