Breaking News

தமிழரின் பாரம்பரியம் கலாச்சாரம் ஆகியவற்றை உள்ளடக்கிய கிழக்குப்பல்கலைக்கழக மாணவர்களால் மாமாங்கப்பிள்ளையார் ஆலயத்தில் கண்காட்சி


கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத் துறையினர் வருடா வருடம் மாமாங்கப் பிள்ளையார் ஆலய முன்றலில் பாரம்பரிய அரங்க ஆற்றுகைகளையும் கண்காட்சியையும் நடாத்தி வருகின்றனர். இவ்வருடத்திற்கான நிகழ்வின் தொடக்க நிகழ்வுகள் 15.07.2017 ஆந் திகதி சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு ஆலய முன்றலில் நுண்கலைத் துறையினரால் அமைக்கப்பட்ட கூத்துக் களரியில் மேற்கொள்ளப்பட்டன. இவர்களின் பாரம்பரிய அரங்க ஆற்றுகைகள் 28.07.2017 வரையான நான்கு நாட்கள் இடம்பெறும்.

இந்நிகழ்வு நுண்கலைத் துறைத் தலைவர் கலாநிதி வ.இன்பமோகன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கிழக்குப்பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் த.ஜெயசிங்கம் அவர்கள் கலந்து சிறப்பித்தார். சிறப்பு அதிதிகளாக கலை கலாசாரப்பீடாதிபதி திரு.மு.ரவி, சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சி.ஜெயசங்கர், கிழக்குப்பல்கலைக்கழக பேரவை உறுப்பினர் பேராசிரியர் சி.மௌனகுரு மற்றும் மாமாங்கப்பிள்ளையார் ஆலய வண்ணக்குமாரான திரு.தி.விக்கிரமன், திரு.நெ.ஸ்ரீஸ்கந்தராஜா, திரு.உ.சுவேந்திரகுமார், திரு.புவனச்சந்திரா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

வாழும்போதே வாழ்த்துவோம் என்னும் நுண்கலைத்துறையினரின் நோக்கிற்கு அமைவாக பாரம்பரிய கூத்துக்கலைஞர்களும் கூத்து எழுதும் புலவர்களும் கொளரவிக்கப்பட்டனர். பருத்திச் சேனை கன்னங்குடாவைச் சேர்ந்த அண்ணாவியார் நோஞ்சிப்போடி சண்முகநாதன், மூன்டாளமடு கன்னங்குடாவைச் சேர்ந்த அண்ணாவியார் மாணிக்கப்போடி பசுபதி, மற்றும் கண்ணகிநகர் பாவற்கொடிச் சேனையைச் சேர்ந்த கூத்து எழுதும் புலவர் கணபதிப்பிள்ளை திருநாவுக்கரசு ஆகியோர் சிறப்பு அதிதிகளால் பொன்னாடை போர்த்தி, உபவேந்தரால் நினைவுச் சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வு நுண்கலைத் துறை விரிவுரையாளர் திரு.கு.ரவிச்சந்திரனின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்றது.  

நிகழ்வின் இறுதியாக நுண்கலைத் துறை மாணவர்களினால் அமைக்கப்பட்ட பாரம்பரிய அரங்கப் பொருட்களின் காட்சிக் கூடம் உபவேந்தரால் பொது மக்களின் பார்வைக்காகத் திறந்து வைக்கப்பட்டது. இச்செயற்பாடுகள் நுண்கலைத் துறை விரிவுரையார் திரு.சு.சந்திரகுமார் அவர்களின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்றது.

முதல் நாள் மாலை நிகழ்வாக நுண்கலைத் துறை மாணவர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மகிடிக் கூத்து நிகழ்த்துகை இடம் பெற்றது. இரவு நிகழ்வாக குருக்கள்மடம் கலைஞர்களும்; கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத் துறை மாணவர்களும், விரிவுரையாளர்களும் இணைந்து நிகழ்த்திய 'குருக்கேத்திரன் போர்' வடமோடிக் கூத்து இடம்பெற்றது.

இரண்டாம் நாள் நிகழ்வாக கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத் துறையினரால் மேற்கொள்ளப்படும் வீரகுமாரன் நாடகம் வடமோடிக் கூத்து நிகழ்த்துகை செய்யப்படும்.

மூன்றாம் நாள் மாலை நிகழ்வாக வவுணதீவைச் சேர்ந்த விபுலானந்தா கலைக்கழகத்தினரின்; 'கிழவி வாயும் கிழமை லோனும்' என்னும் நகைச்சுவைக் கூத்து, இரவு நிகழ்வாக கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா கலைக்கலா மன்றத்தினரின் 'அரிச்சந்திரன' வடமோடிக் கூத்தும் நிகழ்த்துகை செய்யப்படும்.

நான்காம் நாள் மாலை நிகழ்வாக பருத்திச் சேனை கலைஞர்களினால் நிகழ்த்துகை செய்யப்படும் கரகம், இரவு நிகழ்வாக கன்னங்குடா கண்ணகி முத்தமிழ் மன்றத்தினரால் நிகழ்த்துகை செய்யப்படும் 'வானர யுத்தம்' என்னும் கூத்து நிகழ்த்துகை செய்யப்படும்.

இந்நிகழ்த்துகை நுண்கலைத்துறையினரின் சமூகத்துடன் இணைந்ததான மாணவர்களின் கல்விச் செயற்பாட்டை மேற்கொள்ளும் அவர்களின் கலைத்திட்டத்துடன் இணைந்த நோக்கங்களின் அடிப்படையாக அமைந்திருந்தாலும் இச்செயற்பாடுகளின் ஊடாக பல ஆக்கபூர்வமான விளைவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.


No comments