Breaking News

மட்டு. மாநகர மேயருக்கு எருமைத்தீவின் பணிவான வேண்டுகோள்


பிரபல பத்திரிகை ஒன்றில் எமது மட்டு மேயர் தி.சரவணபன் அவர்கள்  'எமது மட்டு வாவியின் முத்துப் போன்று காணப்படும் எருமைத்தீவு சுற்றுல்லாத்துறை மையமாக மாறும்'  என்று கூறிய கருத்தினை பிரசுரம் செய்திருந்தது.


இதன் போது எமது மட்டு மேயர் மேலும் தெரிவிக்கையில் எருமைத்தீவில் ஆடம்பர ஹோட்டல்களும் , இரவு சந்தைகளும், கலாசார நிகழ்வுகளும் ஏற்படுத்தப்பட்டால் சுற்றுலாப் பிரயாணிகளை அவை கவர்ந்திக்கும் இதன் மூலம் தொழில் வாய்ப்புக்களும் வியாபார உயர்வும் இலகுவாக கிடைத்து விடும் என குறிப்பிட்டிருந்தார்.




மட்டக்களப்பு  பிரசேத்தில் இவ்வாறான அபிவிருத்திகள்  ஏற்படுவதானால் பல்வேறுபட்ட நன்மைகள் கிடைத்தாலும்  அவை  எமது அடுத்த சந்ததியினருக்கு கிடைக்கவேண்டிய இயற்கையின் வளங்களை அழித்துவிடுமோ? என்கின்ற பயம் இயற்கை ஆர்வலர்களுக்கு உருவாகின்றது.

மட்டு வாவியின் எழுவான் கரைக்கும் படுவான் கரைக்கும் மத்தியில் அமைந்துள்ள எருமைத்தீவில் பிரதானமாக நெற்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது. இதனால் பல விவசாயிகள் நெற்  செய்கை மேற்கொள்ளுவதுடன் அவர்களது மந்தைககளை மேய்க்க கூடிய மேச்சல் பிரதேசமாகவும் காணப்படுகின்றது. இத்தீவினை சுற்றி கண்ணா, கிண்னை  போன்ற கண்டல் தாவரங்கள் காணப்படுகின்றன. இக் கண்டல் தாவரங்களின் மூலம் மீன்கள் மற்றும் நண்டுகள் வாழக் கூடிய வாழிடங்களாகவும்  மற்றும் இனப் பெருக்கத்தினை  மேற்கொள்ளக் கூடிய சூழ்நிலைகளைக் கொண்டதாவும்  உள்ளது.அத்துடன்  சில சந்தர்ப்பங்களில் வெளிநாட்டு பறவைகள் தங்கிச் செல்கின்ற பறவைகள் சரணாலயமாகவும் காணப்படுகின்றது.

இத் தீவில் பல்வேறுபட்ட சிறு விலங்குகள் ( உதாரணமாக பாம்புகள், நரிகள், சிறு வகைப் பூச்சிகள் , குருவி வகையினங்கள் ),அருகி வருகின்ற தாவரயினங்கள் போன்ற பல்வேறுபட்ட உயிர்ப்பல்வகைமைகள் பரம்பிக் காணப்படுகின்றன.

இவ்வாறான இயற்கை வளங்களைக் கொண்டு காணப்படும் இப் பிரதேசத்தில் சொகுசு ஹோட்டல்கள் மற்றும் கலாசார விழாக்களை ஏற்படுத்தும் போது பல்வேறுபட்ட  சூழலியல் பிரச்சினைகள் உருவாகக்கூடும். உதாரணமாக  ஹோட்டல்களை அமைக்கத் தேவையான நிலங்கள் நெற்செய்கை மேற்கொள்ளப்படுகின்ற விவசாய நிலங்களிலிருந்தே பெறப்பட வேண்டும்  அவ்வாறு  நிலங்கள் பெறப்பட்டாலும் அவ் விவசாய நிலங்களை அழிக்க வேண்டும் இவ்வாறு அழிவுகளை மேற்கொள்ளும் போது அந் நிலங்களை சூழவுள்ள உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடும். இதனால் உயிர்ப் பல்வகையில் சீர்குலையும்.

இங்கு சந்தை ஸ்தாபனங்களை அமைக்கின்ற வேளையில் அங்கிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை நாம் எவ்வகையான சிறந்த நுட்பமான கழிவு முகாமைத்தினை கடைப்பிடித்தாலும் சிறு தவறுகளினூடாக மிகப் பெரிய பிரச்சினைகள் உருவாக வாய்ப்புள்ளன.உதாரணமாக  ஏதிர்காலத்தில் உருவாக்கப்பட்வுள்ள ஸ்தாபனங்களின் மூலம் வெளியேறும் கழிவுகளை மேச்சல் விலங்குகள் உண்ணும் போது அவ் விலங்களுக்கு உயிராபத்துக்கள்  ஏற்படுத்துவதாக அமையும்.

மட்டு மேயரே எருமைத்தீவில்  சொகுசு ஹோட்டல்கள் மற்றும் சந்தை ஸ்தாபனங்களை அமைப்பதன் மூலம் சுற்றுலாத்துறை ஊக்குவிக்காமல் மாறாக இயற்கையினை பாதுகாத்து எருமைத்தீவினை உல்லாச பிரயாணிகள் பார்வையிடக்கூடிய பாதுகாப்பு சரணாலயமாக  பிரகனப்படுத்தலாமே!

மேற்குறித்த பதிவுகளை மேற்கொண்டதான் காரணமாக எம்மை மறைசிந்தனையுடையவர் என்று எண்ண வேண்டாம்.

-இயற்கை ஆர்வலன்-

No comments