Breaking News

கிணறு வெட்ட பூதம் கிளம்பின கதையாய் மட்டக்களப்பில் காணியதிகாரியின் மர்மமுடிச்சுகள் அவிழ்க்கப்படுகின்றது


சாரய வியாபரிக்கு அரச விடுதி, அரச காணி அபகரிப்பு-- தட்டிக்கேட்டால் பிரச்சனை!- யோகேஸ்வரன் எம்.பி மீதான தாக்குதலின் முழுமையான விபரமும் இதுதான்- ஆவணங்களுடன்!
------------------------------------------------------------------

அண்மையில் மட்டக்களப்பு மாவட்ட பா.உ யோகேஸ்வரன் மீது மாவட்ட காணி ஆணையாளர் தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்த சம்பவத்துடன் தொடர்புடைய காணி விவகாரத்தை தமிழ் பக்கம் வெளிச்சமிடுகிறது. இந்த காணி மோசடியின் பின்னணியில் காணி ஆணையாளர் இருந்து, முறையற்ற விதமாக தனிநபரிற்கு காணியை பெற்றுக்கொடுக்க உதவினார் என்பதே யோகேஸ்வரனின் குற்றச்சாட்டு.

மட்டக்களப்பிற்கு வடக்கே அமைந்துள்ள கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேசசெயலாளர் பிரிவுக்குட்பட்ட காயான்கேணி கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள புல்லாவி எனும் இடத்தில் 31A, 3 றூட், 35 பேர்ச் விஸ்தீரணமுடைய அரசகாணியே மோசடியாக அபகரிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது வெளிநாடு ஒன்றில் வசிக்கும் மட்டக்களப்பை சேர்ந்த பெரியதம்பி குமணதாஸ் என்பவரால் இரண்டு ஆட்சி உறுதிகள் எழுதப்பட்டு அத்துமீறி வேலி அடைக்கப்பட்டுள்ளது. இது முறையற்ற விதத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலம், அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் இந்த மோசடி நடைபெற்றுள்ளது.
இவ் ஆதனம் தொடர்பாக பெரியதம்பி குமணதாஸினால் சமர்ப்பிக்கப்பட்ட மூல ஆவணம் 1984 ம் ஆண்டு எழுதப்பட்டுள்ளது. இந்த ஆவணத்துடன், 2015இல் காணியை பதிவுசெய்ய கோறளைப்பற்று பிரதேசசெயலகத்தை அணுகியபோது, அது அரசகாணியென கூறி விண்ணப்பத்தை நிராகரித்துள்ளனர்.

மீளவும் 29521 ஆம் இலக்க 11.09.2015ம் திகதிய போலி ஆட்சி உறுதி மூலம் எழுதப்பட்டுள்ளது. இதனையும் பிரதேசசெயலகம் நிராகரித்துள்ளது.
தமது காணியை, அரச காணியென கைப்பற்ற முயற்சிப்பதாக இலங்கை மனிதஉரிமை ஆணைக்குழுவில் குமணதாஸ் தரப்பால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. குமணதாஸின் அடையாள அட்டை இலக்கமும், உறுதியில் குறிப்பிடப்பட்டுள்ள அடையாள அட்டை இலக்கமும் வேறுவேறாக இருப்பதை காரணம் காட்டி, மனிதஉரிமை ஆணைக்குழு நடவடிக்கை எடுப்பதை தவிர்த்து விட்டது. இதேவேளை, தனியாரின் இந்த மோசடி நடவடிக்கை குறித்து நிதிக்குற்ற விசாரணை பிரிவு மற்றும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு ஆகியவற்றிலும் பொதுநலன் கருதிய முறைப்பாடு சமூக ஆர்வலர்களால் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
மேற்குறித்த அரசகாணி தொடர்பாக 1984ம் ஆண்டு மற்றும் 2015ம் ஆண்டு ஆகிய இரு வேறுபட்ட (31 வருட இடைவெளியில்) கால இடைவெளியில் மோசடியான முறையில் போலியான இரு ஆட்சி உறுதிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. பெ.குமணதாஸ் என்பவர் 1974ம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பிறந்ததாக அடையாள அட்டை சமர்ப்பித்திருக்கிறார். 1984ம் ஆண்டை குறிப்பிட்ட ஆட்சி உறுதி தயாரிக்கப்பட்டுள்ளது. 2015 ம் ஆண்டு மீளவும் போலியான ஆட்சி உறுதி எழுதி இக் காணிக்கான உரிமை கோரப்படுகிறது.
மாவட்ட காணி பதிவாளர் க.திருவருள் பிரதேச செயலாளருக்கு கடிதமொன்று (மட்/கா.ப/ப.சே/பொது/2014 ஆம் இலக்க- 2015.11.17ம் திகதி) அனுப்பியிருந்தார். இந்த காணி அரச காணியா அல்லது தனியார் காணியா என்பதை உறுதிசெய்யுமாறு அதில் கோரப்பட்டிருந்தது.
நிலஅளவை திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட lTRACING NO BT/KPN/2013/LIED.020 படி துண்டு இலக்கம் 643 வடக்கு எல்லையாக காட்டப்பட்டு Pullavi Poomi Scrup juncle, State என இந்த காணி குறிப்பிடப்பட்டிருந்தது. இன்னொரு எல்லையாக, வவுனியாவை சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிசோரின் காணி உள்ளது. உரிய விசாரணையின் பின்னர் பிரதேச செயலாளர் அரசகாணி என உறுதிப்படுத்தியிருந்தார்.
LAN/NOTDD/1/1 ஆம் இலக்க 10.12.2015ம் திகதிய கடித்தின் மூலம் பிரதேச செயலாளரினால் அரசகாணி என மாவட்ட காணி பதிவாளருக்கு தெரியப்படுத்தப்பட்டிருந்தது. இதன் பின்னர் மாகாண காணி திணைக்களத்தில் இருந்து குறித்த காணியை தனியார் காணியென காண்பிக்கும் ஆவணங்களை பெற்றுக்கொடுக்க மாவட்டத்தின் காணி தொடர்புடைய உயரதிகாரியொருவர் முயன்றுள்ளார்.
மோசடியான உறுதியின் மூலம் காணி அபகரிப்பு முயற்சி செய்யப்பட்டதையடுத்து, கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பொலிஸில் முறைப்பாடு செய்தார். உடனடியாக அவரது இடமாற்றமும் நிகழ்ந்தது.
இது அரசகாணி, அரசகாணியில் அபிவிருத்தி நடவடிக்கைகள் செய்ய முற்பட்டார் என கிராமசேவகரால் வாகரை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஆனால், பொலிசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இது சதுப்பு நில காணி. சதுப்பு நில காணியை தனியாருக்கு அரசாங்கம் வழங்கியிருக்குமென்பதற்கு எந்த வாய்ப்புமில்லை.
இந்த விடயம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனின் கவனத்திற்கு சென்றதையடுத்து, அவர் மாவட்ட காணிப்பதிவாளரிடம் காணி தொடர்பில் கேட்டபோது, அது அரசகாணிதான் என்பதை காணிப்பதிவாளர் உறுதிசெய்துள்ளார்.

தற்போதுவரை தனியாரின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. காணியை சுற்றி வேலியமைத்து, மின்சாரம் பெறுவதற்கு தற்போது முயன்று வருகிறார். தமக்கு காணி சொந்தமானதென காண்பிக்கும் ஆவணங்கள் சிலவற்றை குறிப்பிட்ட தனியார் பெற்றிருக்கிறார்.
அதிகாரிகளிடம் இருந்து குறிப்பிட்ட ஆவணங்களை தனியார் மோசடியாக பெற்றுக்கொண்டது எவ்வாறு?
உயரதிகாரிகளின் அனுசரணை இல்லாமல் இவ்வாறான ஆவணங்களை தனியார் ஒருவர் எவ்வாறு பெற்றுக்கொள்ள முடியும்?
இதனையடுத்து ஆளுனரின் கவனத்திற்கு இந்த விடயத்தை யோகேஸ்வரன் கொண்டு வந்துள்ளார். அத்துடன் மாவட்டத்தின் எல்.ஆர்.சி காணி விபரத்தை தருமாறும் காணி ஆணையாளர் விமல்ராஜ் மற்றும் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்த விவகாரங்கள் முழுமையாக விசாரிக்கப்பட்டால் மாவட்ட காணி உயரதிகாரியொருவர் சிக்குவார். இந்த நிலையிலேயே மாவட்ட காணி ஆணையாளர் விமல்ராஜ், யோகேஸ்வரன் எம்.பி சச்சரவு நடந்துள்ளது.
சம்பவதினம் யோகேஸ்வரன் எம்.பியிடம் சென்ற விமல்ராஜ், பிரச்சனையை பெரிதுபடுத்தாமல் விடுமாறு கேட்டுள்ளார். அதற்கு யோகேஸ்வரன் சம்மதிக்காமல் விட்டதையடுத்தே சச்சரவு முற்றி, தாக்குதல் வரை சென்றுள்ளது.
இதேவேளை, இந்த சட்டவிரோத காணி அபகரிப்பு முயற்சியில் ஈடுபட்ட ஒருவருக்கு முன்னாள் அரசஅதிபர் சாள்ஸ் (தற்போதைய சுங்க பணிப்பாளர்) ராஜஉபசரிப்பு நடத்தியுள்ளார்.
இந்த போலி காணி உறுதியில் சாட்சி கையெழுத்து வைத்தவர்களில் ஒருவர் ரவி. கருணா அம்மானின் முன்னாள் இணைப்பு செயலாளர். தற்போது மாவட்டத்தின் சாராய விநியோகத்தராக உள்ளார். அவருக்கு நிறைவேற்று அரச அதிகாரிகளுக்கு வழங்கும் அரச விடுதியொன்றை மாவட்ட அரசாங்க அதிபர் வழங்கியுள்ளார். விடுதிக்கான நீர், மின்சார கட்டணங்கள் அரச செலவிலேயே செலுத்தப்படுகின்றன. அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் உத்தரவிலேயே இந்த வசதிகளை ஏற்படுத்தி கொடுத்ததாக முன்னாள் அரசஅதிபர் ஏற்கனவே குறிப்பிட்டிருந்ததும் இங்கே சுட்டிக்காட்ட தக்கது.
காணி ஆணையாளர் விமல்ராஜ் இந்த நியமனத்தை பெற்றது- கருணா அம்மான் அமைச்சரவையில் இருந்த சமயத்தில். அமைச்சரவை பத்திரமொன்றின் ஊடாக உரிய தகுதியை பெறாத விமல்ராஜ் நியமிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

படங்கள்
சட்டவிரோதமாக அபகரிக்கப்பட்ட காணியின் அமைவிடம்
காணியின் படம்
2015 ஆதன உறுதி
1984 ஆதன உறுதி
மாவட்ட காணி பதிவாளர், பிரதேசசெயலகத்திற்கு எழுதிய கடிதம்
அது அரசகாணியென்பதை உறுதி செய்த பிரதேச செயலாளரின் கடிதம்

யோகேஸ்வரன் எம்.பியின் வீட்டில் சச்சரவில் ஈடுபட்ட பின்னர் பொலிசார் தலையிட்ட நிலையில் காணி ஆணையாளர் விமல்ராஜ் மற்றும் மனைவி












No comments