Breaking News

கொழும்பிலிருந்து வாழைச்சேனைக்கு சைக்கிளில் வந்த இளைஞன்

இலங்கையிலுள்ள அனைத்து துறைமுகங்களையும் துவிச்சக்கர வண்டியில் சுற்றி வரும் இளைஞருக்கு வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மீன்பிடி துறைமுக சட்டவாக்க கூட்டுத்தாபனத்தின் நாற்பத்தைந்தாவது (45) வருட பூர்த்தியை முன்னிட்டு அதன் ஊழியர் ஒருவர் நாட்டில் உள்ள மீன்பிடி துறைமுகங்கள் அனைத்தையும் துவிச்சக்கர வண்டியில் சுற்றிவரும் முயற்சியை கொழும்பில் உள்ள தலைமை காரியாலயத்தின் அனுமதியுடன் ஆரம்பித்துள்ளார்.



இலங்கை மீன்பிடி துறைமுக சட்டவாக்க கூட்டுத்தாபன ஊழியர் ரி.பி.கொஸ்ஸா என்பவரே இந்த முயற்சியை கையிலெடுத்துள்ளார்.

அந்த வகையில் வியாழக்கிழமை காலை ஹம்பாந்தோட்டை கிரிந்தையில் ஆரம்பித்து இரவு மட்டக்களப்பு வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்தை வந்தடைந்த இளைஞருக்கு வாழைச்சேனை மீன்பிடி துறைமுக முகாமையாளர் ரி.சிவரூபன் மற்றும் ஏ.ரி.எம்.ஜி அமரஜீவ ஆகியோரின் தலைமையில் துறைமுக ஊழியர்கள் மற்றும் துறைமுக பாதுகாப்பு பிரிவு உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் வரவேற்பும் கௌரவிப்பு நிகழ்வும் நடைபெற்றது.

மேலும் வாழைச்சேனை துறைமுகத்தில் வியாழக்கிழமை இரவு தங்கியிருந்து இன்று வெள்ளிக்கிழமை காலை தனது பயணத்தை ஆரம்பித்துள்ளதுடன், இன்று மாலை திருகோணமலை கொட்வே துறைமுகத்தை சென்றடையவுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வீரர் கொழும்பு தலைமை காரியாலயத்தில் இருந்து செப்டம்பர் 26 ஆம் திகதி சைக்கிள் ஓட்டத்தை ஆரம்பித்து மீண்டும் ஒக்டோபர் 2 ஆம் திகதி தலைமை காரியாலயத்திலேயே ஓட்டத்தை நிறைவு செய்யவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இவ்வீரர் பல சைக்கிள் ஓட்ட போட்டி நிகழ்வுகளில் கலந்து திறமைகளை வெளிப்படுத்திய வீரர் என்பதுடன், இவரின் இந்த ஊக்கம் நிறைந்த செயற்பாட்டுக்கும் திறமைக்கும் தலைமை காரியாலயம் உட்பட அனைத்து துறைமுக உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களும் ஆதரவு வழங்குவதுடன் ஒத்துழைப்பினையும் வழங்கியுள்ளனர்.

No comments