Breaking News

2020 இல் அடுத்த ஜனாதிபதியாக ரணில்


பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அடுத்த ஜனாதிபதியாக இராஜதந்திர வியூகம் வகுத்து வருவதாக பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

பெரளையில் அமைந்துள்ள என்.எம்.பெரேரா கேந்திர நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில் “மாகாண சபைகள் தேர்தல்கள் திருத்தச்சட்டம் முன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருந்ததாக ஜனாதிபதி நேற்று (நேற்றுமுன்திம்) கூறியிருந்தார்.

இதில் இருந்து தெளிவாக விளங்குவதாவது ஜே.வி.பியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசின் பங்காளிக் கட்சிகள்தான் என்று. எதிரணியான எங்களின் வாய்ப்புகளைப் பறிப்பதற்காக இவர்கள் எதிர்கட்சிகளாக நாடாளுமன்றத்தில் கையாளப்படுகின்றன.

2010, 2015ஆம் ஆண்டுகளில் ஜே.வி.பி நேரடியாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு தமது ஆதரவை வழங்கியிருந்தது. தற்போது அவர்கள் 2020இல் ஜனாதிபதி வேட்பாளராக தம்மில் ஒருவரை களமிறக்கும் நோக்குடன் அரசுக்கு எதிராக ஒரு பிரசாரத்தையும் முன்னெடுத்து வருகின்றனர்.

அரசில் இருந்து குழப்ப நிலையில் வெளியேறும் ஒரு தொகுதியினரையும், அரசு மீது அதிருப்தியடைந்துவரும் மக்களையும் தமது பக்கம் ஈர்த்து வேட்பாளரை களமிறக்கும் முனைப்புகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலம் இன்னமும் நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் இருந்து நீக்கப்படவில்லை. இது தொடர்பில் கேள்வியெழுப்பிய தினேஸ் குணவர்தன எம்.பிக்கு, அரசு அடிப்பணிய வேண்டுமா? உங்களுக்கு என்னக் கவலை என்று கூறுகின்றனர்.

20ஆவது திருத்தச்சட்டத்தை நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் இருந்து அகற்றும் வரை தொடர்ந்து அழுத்தத்தை கொடுப்போம். காரணம், 20ஆவது திருத்திதன் 91 ஆவது சரத்தில் ஜனாதிபதியாக ஒருவர் போட்டியிட வேண்டும் என்றால் நாடாளுமன்றத்தில் 40 வருடங்களாவது இருந்திருக்க வேண்டும் என்று கூறும் வகையில் அமைந்துள்ளது.

ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இந்த நாட்டு மக்கள் ஒருபோதும் அதிகாரத்தை கொடுக்க மாட்டார்கள் என்று கருதி இராஜதந்திர ரீதியில் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கப் பார்க்கின்றனர். இவ்வாறான சரத்தொன்று அரசமைப்பில் காணப்படுமாயின் 40 வருடங்கள் நாடாளுமன்றில் இருந்த ஒரே நபராக ரணில் விக்கிரமசிங்க காணப்படுவார்.

மக்கள் விரும்பாத போதும் அவர் ஜனாதிபதியாகத் தேர்வுசெய்யபடும் சந்தர்ப்பத்தை உருவாக்கப் பார்க்கின்றனர்; என்றார்.

No comments