Breaking News

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொறுமைக்கு இது தான் காரணம் - துரைராசசிங்கம் விளக்கம்

அரசியலமைப்புச் சட்டத்தை மிகச் சிறப்பான ஒரு அரசியலமைப்புச் சட்டமாக ஆக்கும் வரையில் நாங்கள் பொறுமை காக்க வேண்டியவர்களாக உள்ளோம் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு - தும்பங்கேணியில் இன்று மக்களை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பில் அதிருப்தியில் இருக்கும் சிலர் நாங்கள் உணர்ச்சிவசப்பட்டு தூண்டும் விதமாக பேசுவதாக கூறுவார்கள். ஆனால் அது அவ்வாறு அல்ல. மிக ஆழமான அர்த்தத்தோடு மனதில் உள்ளவற்றைப் பேசுபவர்கள் நாங்கள்.
நாங்கள் கடந்த இரண்டு வருடத்திற்கு முன்புதான் இந்த கிழக்கு மாகாணத்திலே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் சேர்ந்து இந்த ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கின்றோம்.
இதற்கு முன்பெல்லாம் எங்கெங்கு குறைகள் நடக்கின்றதோ அந்த குறைகளையெல்லாம் எடுத்துக் காட்டி எமது உரிமை சம்பந்தமான விடயங்களையெல்லாம் சொல்லி வந்தோம்.
ஆனால் இப்போது ஒரு வித்தியாசமான நிலைக்கு நாங்கள் வந்திருக்கின்றோம். தற்போது கூட்டுப்பொறுப்பு என்கின்ற ரீதியில் நாங்களும் சேர்ந்து வேலை செய்கின்ற அந்தப் பொறுப்போடு நாங்கள் செயற்பட வேண்டிய இடத்திலே இருக்கின்றோம்.
இந்த அரசியலமைப்புச் சட்டத்தை மிகச் சிறப்பான ஒரு அரசியலமைப்புச் சட்டமாக ஆக்கும் வரையிலே நாங்கள் எவ்வளவு பொறுமை காக்க வேண்டுமோ அவ்வளவு பொறுமை காக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
ஏனெனில் வெண்ணெய் திரண்டு வரும் போதெல்லாம் தாழியை உடைத்த கதையாகத்தான் இந்த நாட்டிலே தமிழர்களின் வரலாறு இருந்து கொண்டிருக்கின்றது.
இன்னுமொரு சந்தர்ப்பத்திலே நாங்கள் தாழியை உடைய விட்டோம் என்றால் எமது இருப்பு மிகச் சீக்கிரத்திலேயே இல்லாமல் போய்விடும்.

No comments