Breaking News

முகத்துவாரத்தை வெட்டவிடாமல் குரோதம் காட்டும் ஆலயடிவேம்பு DS’ செய்தி தொடர்பாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் மறுப்பு

முகத்துவாரத்தை வெட்டவிடாமல் குரோதம் காட்டும் ஆலயடிவேம்பு DS’ என்ற தலைப்பில் இம்போட் மிரர் இணையத் தளத்தில் இன்று (28) காலை வெளியிடப்பட்ட செய்தி தொடர்பாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீஸன் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்.




கடந்த மூன்று தினங்களாக அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு மற்றும் அக்கரைப்பற்று பிரதேசங்களில் பெய்துவரும் பருவப்பெயர்ச்சி மழையினால் அக்கரைப்பற்று பிரதேசம் மழை வெள்ளத்தில் மூழ்கியிருப்பதாகவும், குறிப்பாக முஸ்லிம் மக்களின் வீடுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருப்பதை நன்கு அறிந்திருந்தும் வெள்ளநீர் இந்து சமுத்திரத்தோடு கலக்கும் சின்னமுகத்துவாரம் கழிமுகப் பிரதேசம் தனது ஆளுகைக்குட்பட்டிருப்பதால் அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் வேண்டிக்கொண்ட பின்னரும் அக்கழிமுகத்தைத் திறக்கவிடாமல் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் தடுப்பதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்ததுடன், ‘வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்கள் கஸ்டப்பட்டால் பரவாயில்லை’ என்ற தோரணையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் இவ்வாறு நடந்துகொள்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் ஊடக தர்மத்துக்குப் பொருந்தாத சில சொற்பிரயோகங்களைப் பாவித்ததன் மூலம் தமிழ் – முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான முரண்பாட்டைத் தோற்றுவிக்கும் எண்ணத்தோடு அச்செய்தி எழுதப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.



மழை வெள்ளத்தினால் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர், ஆலையடிவேம்பு பிரதேசத்தில் சுமார் 13,000 ஏக்கர் நெல்வயற் பிரதேசமாகக் காணப்படுவதுடன் வேளாண்மை விவசாயமே மக்களது பிரதான வாழ்வாதாரமாகவும் விளங்குகின்றது. அத்துடன் இரண்டாம் நிலை வருமானங்கள் தோட்டப் பயிர் மற்றும் சேனைப் பயிர்ச்செய்கை மூலம் பெறப்படுகின்றன.


இவற்றில் கிட்டத்தட்ட 8,000 ஏக்கர் நிலங்கள் அக்கரைப்பற்று பிரதேச முஸ்லிம் விவசாயிகளுக்குச் சொந்தமானவை. வடகீழ் பருவப்பெயர்ச்சி மழையை நம்பிச் செய்யப்படும் பெரும்போக வேளாண்மையானது கடந்த அக்டோபர் மாதம் ஆரம்பமான நிலையில் கடந்த வாரம்வரை போதிய மழைவீழ்ச்சியின்றி ஆலையடிவேம்பு பிரதேசத்தில் பயிர்கள் வாடி அழிந்துகொண்டிருந்த நிலை காணப்பட்டது. தமது வயல் நிலங்களுக்கான நீரைப் பெற்றுக்கொள்வதில் விவசாயிகள் பிரச்சனைகளை எதிர்நோக்கியிருந்த நிலையிலேயே கடந்த மூன்று நாட்களுக்கு முன்னால் போதியளவு மழை பெய்ய ஆரம்பித்திருந்தது. இந்தநிலையில் அக்கரைப்பற்று பிரதேசத்தைப் போலவே பொதுமக்களின் குடியிருப்புக்கள் சூழ்ந்த ஆலையடிவேம்பின் பெரும்பாலான தாழ்நிலப் பிரதேசங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மழை வெள்ளத்தில் பாதிப்படையத் தொடங்கியிருந்தன.



இந்தநிலையில் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அறிவித்தல் மற்றும் விவசாய சங்கங்களின் வேண்டுகோளின்படி பனங்காடு, தில்லையாற்றின் நீர் மட்டம் உயர்வடையாமை மற்றும் வயல் நிலங்களுக்குப் போதியளவு மழைவீழ்ச்சி கிடைக்கும்வரையில் வெள்ளநீர் இந்து சமுத்திரத்தோடு கலக்கும் சின்னமுகத்துவாரம் கழிமுகத்தைத் திறந்துவிடுவதில் சிக்கல்களை எதிர்நோக்கியிருந்தோம். இதுவரை காலமும் மழைவீழ்ச்சியின்றி வரண்டு போயிருந்த பயிர் நிலங்களின் நீரை அகத்துறிஞ்சும் அளவு போதுமானவரையில் நிகழும்வரையில் தில்லையாற்று நீரைத் திறந்துவிட முடியாதநிலை எமக்கிருந்தது. மேலும் அவ்வாறு செய்யும்பட்சத்தில் தமிழ் முஸ்லிம் விவசாயிகள் அனைவரும் பாதிக்கப்படுவதோடு, நன்னீர் மீனவர்களும் பாதிக்கப்படுவர் என்பதால் இந்நிலை குறித்து அக்கரைப்பற்று பிரதேச செயலாளருக்கும் அறிவித்திருந்தோம்.


எனினும் நேற்று மாலைவரை அதற்கான அனுமதி எனக்குக் கிடைத்திருக்கவில்லை. இன்று (28) காலை குறித்த அனுமதி கிடைக்கப்பெற்றதும் ஆலையடிவேம்பு உதவி பிரதேச செயலாளர் திரு. தங்கையா கஜேந்திரனின் பிரசன்னத்துடன் அக்கழிமுகம் திறக்கப்பட்டு வெள்ளநீர் கடலோடு கலப்பதற்கான வேலைகளைச் செய்திருந்தோம். இப்போது அப்பிரதேசத்துக்குச் செல்லமுடிந்த அனைவராலும் கழிமுகம் திறக்கப்பட்டிருப்பதைப் பார்வையிடமுடியும்.



இருந்தபோதும் மேற்கூறப்பட்ட விடயங்கள் குறித்த எவ்வித சிந்தனையோ, அறிவோ இல்லாத அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரான குறிப்பிட்ட செய்தியாளர், உள்ளூராட்சி சபைத் தேர்தல் அண்மித்துள்ள இச் சந்தர்ப்பத்தில், தனது சொந்த அரசியல் இலாபங்களை முன்னிறுத்தி ஊடக தர்மத்துக்குப் பொருந்தாத சில சொற்பிரயோகங்களைப் பாவித்து இதனை அக்கரைப்பற்று – ஆலையடிவேம்பு பிரதேசங்களுக்கிடையிலான பிரச்சனையாகவும், முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களிடையே இன முரண்பாட்டைத் தோற்றுவிக்கும் செயலாகவும் இச்செய்தியை வெளியிட்டிருப்பதுடன் தனது முகநூல் பக்கத்திலும் பதிவுசெய்திருப்பதானது மிகவும் கவலைக்குரிய ஒரு செயல் எனவும் குறிப்பிட்டார்.

No comments